சென்னை: கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடவடிக்கை எடுத்த, பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'உயிர் காக்க, 21 நாட்கள் வீட்டினுள் இருக்க சொல்லும் நேரத்தில், அணி சேரா தொழிலாளர்கள், எப்படி பசியாறுவர் என்பதையும், கவனத்தில் கொள்ள வேண்டும். பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன், சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசினப்படுத்தியவர் பதவி இழப்பர். இது சரித்திரம்' என, கூறியிருந்தார். இதுகுறித்து, பிரதமர் மோடிக்கும், கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நிதி சார்ந்த சில அறிவிப்புகளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவித்து, டுவிட்டரில் கமல் கூறியதாவது: கீழ்மட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற, என் அச்சத்தை, பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில், அவர்களுக்கு ஆதரவளிக்கும், இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார்.